Pages

Monday, December 13, 2010

சச்சினுக்கு "டைம்ஸ்" கவுரவம்

        பிரபல "டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள இந்த ஆண்டின் "டாப்-10' சிறந்த விளையாட்டு தருணங்களில் சச்சினின் 200 ரன் சாதனை இடம் பெற்றுள்ளது.  

கடந்த பிப்., 24ம் தேதி குவாலியரில் நடந்த ஒரு நாள் போட்டியில் இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது. இதில், அபாரமாக ஆடிய இந்திய அணியின் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளின் வரலாற்றில் 200 ரன்கள் அடித்த உலகின் முதல் வீரர் என்ற மகத்தான சாதனை படைத்தார். இதற்கு முன் பாகிஸ்தானின் அன்வர்(எதிர் இந்தியா, 1997) மற்றும் ஜிம்பாப்வேயின் கவன்ட்ரி(எதிர் வங்கதேசம், 2009) ஆகியோர் அதிகபட்சமாக 194 ரன்கள் எடுத்திருந்தனர். 


       சச்சினின் இந்த சாதனையை லண்டனில் இருந்து வெளியாகும் "டைம்ஸ்' பத்திரிகை வெகுவாக பாராட்டியுள்ளது. இந்த ஆண்டின் "டாப்-10' சிறந்த விளையாட்டு தருணங்களில் ஒன்றாக தேர்வு செய்துள்ளது. இது குறித்து இப்பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி:
      விளையாட்டு அரங்கில் சில மைல்கல்லை எட்டவே முடியாது. ஒரு நாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை ஒரே இன்னிங்சில் யாராலும் 200 ரன்களை எட்ட முடியவில்லை. இதற்கு சச்சின் முற்றுப்புள்ளி வைத்தார். கடந்த பிப்ரவரியில் பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக மந்திர இலக்கான 200 ரன்களை அடித்து சாதனை படைத்தார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 25 பவுண்டரிகள் அடங்கும்.
இப்போட்டியில் சச்சின் 199 ரன்களை தொட்ட போது, ஒரு வரலாற்று சாதனையை சந்திக்கப் போகும் உற்சாகத்தில் உள்ளூர் குவாலியர் ரசிகர்கள் காணப்பட்டனர். கையில் மூவர்ணக் கொடியை ஏந்தியவாறு ஆர்ப்பரித்தனர். அந்த நேரத்தில் ஒரு ரன்னை தட்டி விட்டு ஓடிய சச்சின், சாதனை மைல்கல்லை சுலபமாக எட்டினார். இது உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்தது.

1 comment:

  1. Superb Machi ... little Master is a legend of all Times

    ReplyDelete